மகாசுந்தர் நூல் விமர்சனம்
தேவதைகளின் காதலன் (கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் 'தேவதைகளால் தேடப்படுபவன்' நூல் குறித்த என் பார்வை
தேவதைகளின் காதலன்
(கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் 'தேவதைகளால் தேடப்படுபவன்' நூல் குறித்த என் பார்வை)
கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் ஒன்பதாவது நூல் 'தேவதைகளால் தேடப்படுபவன்'. செய்நேர்த்தி மிக்க நகைத்தொழிலாளி நுட்பத்தோடும் அழகோடும் ஆபரணம் செய்வதைப்போல், கவிதைகளை இயற்றியுள்ளார்.
கவிஞரின் செய்நேர்த்தியோடு அவரின் அனுபவமும் சேர்ந்து, புதிய உணர்வனுபவத்தை நம்மையும் உணரச் செய்கிறது.
"என் அகவீணையை ஓர் அற்புதசக்தி மீட்டுகிறது. நான் சிந்திக்காமலேயே எதோ ஒன்று என் உள்ளத்தில் பேசுகிறது! அதே நான் எழுதுகிறேன்!" என்பார் மில்டன். "அடிமனசில் முகிழ்த்துப் பூத்துநிற்கும் அனுபவச் செழுமையின் சத்திய வெளிப்பாடுதான் கவிதை" என்பார் கவிஞர் பாலா.
ஒரு கவிதை எப்போது ஜெயிக்கும்..? நெருப்பு சுடுகிறது என்று எழுதினால் அதே உணர்வும் வலியும் வாசிக்கின்றவர்களுக்கும் ஏற்படுமானால் கவிஞனை முந்திக்கொண்டு கவிதை ஜெயத்துவிடுகிறது.
"தூண்டிற் புழுவினைப்போல் -வெளியே
சுடர் விளக்கினைப் போல்
நீண்ட பொழுதாக -எனது
நெஞ்சந் துடித்த தடீ!
என்ற பாரதியின் பாடல்,மோக வலியை நமக்கும் கடத்துகிறது. தூண்டிலில் அகப்பட்ட புழுவின் வேதனை வெளியே தெரியாது. எரியும் சுடர் விளக்கினைக் கூர்ந்து பார்த்தால் அதன் துடிப்பு தெரியும். உள்ளும் புறமும் காமத்தினால் நெஞ்சம் துடிப்பதை இதைவிட வேறு வரிகளால் (வலிகளால்) காட்டவியலாது.
கவிஞர் தங்கம் மூர்த்தி முதல் கவிதையிலேயே அவரின் உணர்வை நமக்கும் கடத்துகிறார்.
..."இப்போது
மங்கலாய்த் தெரிகிறதெனக்கு
அம்மா இல்லா
இவ்வுலகு"
கவிதை எங்கிருக்கிறது..? சொற்களிலா? இல்லை சொற்கள் வெறும் கருவிதான். "ஓர் உண்மையான உணர்ச்சி தன்னை வெளிப்படுத்தத் துடிக்கும்போது, அது தனக்கான சொற்களைத் தானே தேர்ந்தெடுத்துக்கொள்கிறது.கவிஞன் வெறும் கருவிதான்"என்ற ஓர் அறிஞனின் கூற்று எத்தனை நுட்பமானது..?! கவிதை எப்போது பிறக்கும்..? சொற்கள் சூல் கொண்டால் கவிதை பிறக்கும்.கவிஞன் சொற்களைக் கைப்பற்ற என்னபாடு பட்டிருப்பான்? இதோ கவிஞரின் 'கவிதைக்கு மிக அருகில் சில சொற்கள்' கவிதைப் பாருங்கள்.
.....அகப்படாமல்
சட்டெனப் பறந்து விடுகின்றன
சில சொற்கள்
பலமுறை விரும்பி
பணிந்தழைத்தும்
வரமறுக்கின்றன
சில சொற்கள்
No comments:
Post a Comment