Thursday 26 December 2013

நிறங்கள்

நேற்றென் கனவுகள் 
கறுப்பு வெள்ளையில்
இருந்தன.

வானத்தில் 
நீலமில்லை.

மரங்களில்
பச்சையில்லை.

கடல் வெள்ளையாய்
பால் கறுப்பாய்
இருந்தன.

ரத்தத்தில் 
அதன் நிறமில்லை.

வானவில்லில்
ஏழு கோடுகள் மட்டுமே
இருந்தன.

கனவுகளிலும்
களவாடப்பட்டிருந்தன
வண்ணங்கள்.

நிறமற்றிருக்கிறது
வாழ்க்கை.



Tuesday 17 December 2013

அதனினும் இனிது

1
கொலுசுச் சத்தத்தில்
முதுகுப் பக்கத்தில்

உள்ளங்கை ஈரத்தில்
உதடுகளின் ஓரத்தில் 

கன்னத்து மச்சத்தில்
கருவிழியின் ஆழத்தில் 

எங்கேனும் 
கிடைத்தேனா நான் .


2
பூப்பதற்கு
தயாராகி விட்டது
என் தோட்டம்.

இயற்பெயர்
இருக்கட்டும் .

பூக்களுக்கெல்லாம்
நீ வந்து
ஒரு புனைப் பெயர்
சூட்டிவிட்டுப் போ...

3
நீ
ஊரிலில்லாத நாளன்று
பெய்துகொண்டிருந்த மழையை
நீயென நினைத்தே
நனைந்தேன்.

Monday 16 December 2013

அந்த மரணம் அறிவிக்கப்படவில்லை.

"துக்கச் செய்தி
 மரண அறிவிப்பு "

அதிகாலையில் 
ஆட்டோவில் கேட்கும் 
அவனது குரல்.

அந்தக் குரல் வழியேதான்
அறிய முடியும்
எல்லா மரணத்தையும்.

எந்த மரணமும் 
உறவினர்களுக்கு முன்பே
அவனுக்குத்தான் சொல்லப்படும்.

மெலிந்த உடலும் அழுக்கு ஆடையும்
தாடியுமாய்
ஆட்டோவில் ஒரு மூலையில் 
ஒடுங்கி உட்கார்ந்திருப்பான்
மைக்கைப் பிடித்தபடி.

காற்றில் பரவும்
அவனது குரலில் 
ஒரு கம்பீரம் இருக்கும்.

நின்று நிறுத்தி 
நிதானமாய் அறிவிக்கும்
அவனை
அலட்சியப்படுத்தி யாரும்
கடந்துவிட முடியாது.

இறந்தவரின் குடும்பம் 
பரம்பரை
இத்யாதி
இறுதி ஊர்வலம்
நல்லடக்கம் 
அனைத்தையும் 
கச்சிதமாய்ச் சொல்லி
கவனத்தை ஈர்ப்பான்.

என்னைக் கண்டால் 
டீ வாங்கிக் கேட்பான்.

எப்படிப் போகிறது
வாழ்க்கை 
எனக் கேட்பேன்.

யாரோ செத்து
நான் பிழைக்கிறேன்
என்று சிரிப்பான்.

வேறொரு நாளில் 
மற்றொரு மரண அறிவிப்பில்
புதுக்குரல் கேட்டு
ஆட்டோவை எட்டிப் பார்த்தால் 
அவனிருக்கவில்லை.

வீடு கண்டுபிடித்து
விசாரித்தேன்.

அழுதுகொண்டே அறிவித்தாள்
அந்த வயதான தாய்.

"ஈரல் கெட்டுப்போச்சு
தொண்டையில புண்ணு
படுத்த படுக்கை
போய்ச் சேர்ந்துட்டான்.

எல்லார் சாவையும் சொல்ல
இவன் ஒரு ஆளா இருந்தான்.

இவன் சாவைச் சொல்ல
ஒரு ஆளும் இல்லையே..!"

திரும்பி வரும் வழியெங்கும்
அவனது குரல்
ஒலித்துக்கொண்டேயிருந்தது

அவனது மரணத்தை
அவனே அறிவிப்பதைப் போல.

Saturday 14 December 2013

பெட்ரோல் நிரப்பும் பெண்ணும் என் கவிதையும்

"கவிதை எழுதுவீங்களாமே
என்னைப் பற்றியும்
எழுதுவீங்களா..."

வாரம் இருமுறை
என் வாகனத்திற்கு
பெட்ரோல் நிரப்பும் பெண் கேட்டாள்.

எழுதலாம்.......

பள்ளிச்சீருடை நிறத்திலேயே
ஒரு பணிச்சீருடை.

புத்தகப்பை தாங்கும் தோளில் 
ஒரு பணப்பை.

மேயும் கண்களைத்
தவிர்த்தபடி வேலைக்கவனம்.

தேநீர் சிகரெட்
அரட்டையென
இருக்கும் இடம் விட்டு
அடிக்கடி அகன்றுவிட முடியாமை.

வகுப்பறையில் அமரவைக்கத்தவறி
நெருப்பறையில்
நிற்க வைத்த வறுமை.

ஒருநாள் விடுமுறை எடுத்தாலும்
திணறிப்போகும்
குடும்ப வாகனம்.

எழுதிக்கொண்டிருக்கும்போதே
அலங்காரமற்ற அவளிடம்போய்
அடைக்கலமானது
என் கவிதை.

பெட்ரோல் எரிச்சலால்
சிவந்திருந்தன
அவளது கண்கள் .

அழுதிருந்ததால்
சிவந்திருந்தது
என் கவிதை.

Thursday 12 December 2013

இன்னொரு மனிதன்

மிருகங்களோடு
பழகினான்
மனிதன்.

மிருகங்களிடத்தில்
மனிதநேயமும்
மனிதர்களிடத்தில்
மிருகத்தனங்களும்.

இயந்திரங்களோடு
பழகினான் 
மனிதன்.

இயந்திரங்களிடத்தில்
மனித ஆற்றலும்
மனிதர்களிடத்தில் 
இயந்திரத்தனங்களும்.

இயற்கையோடு 
பழகினான் 
மனிதன்.

இயற்கையிடத்தில
மனித குணங்களும் 
மனிதர்களிடத்தில் 
செயற்கைத்தனங்களும்.

மனிதன் 
பழகவேயில்லை
இன்னொரு மனிதனிடம்.