Tuesday, 6 March 2012

எனது கவிதைகள்-1

எனது " பொய்யெனப்  பெய்யும் மழை"  கவிதை நூலிலிருந்து .......

ஆதாமும் சாத்தானும் 


ஆதிக்கரு உருவானது ஆதாமிடம் எனில்
சாதிக்கரு உருவானது சாத்தானிடம் .

ஆதாமின் பிள்ளைகளுக்கு முத்தம் பிடிக்கும்
சாத்தானின் பிள்ளைகளோ ரத்தம் குடிக்கும் .

ஆதிமனிதன் நெருப்பைக் கண்டான்
சாதிமனிதன் ஏழையின் குடிசையை எரிய வைத்தான்

விண்ணைமுட்டும் கோபுரம் கண்டு கலைகள் வளர்த்தோம்
மண்ணை முட்டும் மருந்துகள் கண்டு அறிவியல் வளர்த்தோம்

அன்னை பாதத்தில் சொர்க்கம் கண்டு அன்பினை வளர்த்தோம்
ஆசானில் இன்னொரு தெய்வம் கண்டு கல்வியை வளர்த்தோம்

வளர்த்ததை எல்லாம் அழிப்பது எப்படியென
ஆராய்ச்சி செய்து சாதியைக் கண்டோம்

சாதிக்கும் தலைவர்கள் இல்லாத தேசத்தில்
சாதிக்குத் தலைவர்கள் ஏராளம் .


பொய்யெனப் பெய்யும் மழை 


பேயாய் பெய்யும் மழை
அடித்துப் பெய்யும் மழை
விட்டுவிட்டுப் பெய்யும் மழை
நசநசவென பெய்யும் மழை
தூறிவிட்டு செல்லும் மழை
எந்தமழையானாலும்
வந்தாலும் சிரமம்
வராவிட்டாலும் சிரமம் -
ஊருக்குப் போன
மனைவியைப் போல .


ஒவ்வொரு முறையும் 


துயரங்களால் துரோகங்களால்
இழப்புகளால் இம்சைகளால்
உடைந்து போய்விடுகிறோம்
ஒவ்வொருவரும்

நம்பிக்கைகளால் ஒட்டிக்கொள்கிறோம்
ஒவ்வொருமுறையும் .

ஆடைகள் என்பதெல்லாம்
தழும்புகளை மறைக்கத்தான் .







  

No comments:

Post a Comment