Monday, 16 December 2013

அந்த மரணம் அறிவிக்கப்படவில்லை.

"துக்கச் செய்தி
 மரண அறிவிப்பு "

அதிகாலையில் 
ஆட்டோவில் கேட்கும் 
அவனது குரல்.

அந்தக் குரல் வழியேதான்
அறிய முடியும்
எல்லா மரணத்தையும்.

எந்த மரணமும் 
உறவினர்களுக்கு முன்பே
அவனுக்குத்தான் சொல்லப்படும்.

மெலிந்த உடலும் அழுக்கு ஆடையும்
தாடியுமாய்
ஆட்டோவில் ஒரு மூலையில் 
ஒடுங்கி உட்கார்ந்திருப்பான்
மைக்கைப் பிடித்தபடி.

காற்றில் பரவும்
அவனது குரலில் 
ஒரு கம்பீரம் இருக்கும்.

நின்று நிறுத்தி 
நிதானமாய் அறிவிக்கும்
அவனை
அலட்சியப்படுத்தி யாரும்
கடந்துவிட முடியாது.

இறந்தவரின் குடும்பம் 
பரம்பரை
இத்யாதி
இறுதி ஊர்வலம்
நல்லடக்கம் 
அனைத்தையும் 
கச்சிதமாய்ச் சொல்லி
கவனத்தை ஈர்ப்பான்.

என்னைக் கண்டால் 
டீ வாங்கிக் கேட்பான்.

எப்படிப் போகிறது
வாழ்க்கை 
எனக் கேட்பேன்.

யாரோ செத்து
நான் பிழைக்கிறேன்
என்று சிரிப்பான்.

வேறொரு நாளில் 
மற்றொரு மரண அறிவிப்பில்
புதுக்குரல் கேட்டு
ஆட்டோவை எட்டிப் பார்த்தால் 
அவனிருக்கவில்லை.

வீடு கண்டுபிடித்து
விசாரித்தேன்.

அழுதுகொண்டே அறிவித்தாள்
அந்த வயதான தாய்.

"ஈரல் கெட்டுப்போச்சு
தொண்டையில புண்ணு
படுத்த படுக்கை
போய்ச் சேர்ந்துட்டான்.

எல்லார் சாவையும் சொல்ல
இவன் ஒரு ஆளா இருந்தான்.

இவன் சாவைச் சொல்ல
ஒரு ஆளும் இல்லையே..!"

திரும்பி வரும் வழியெங்கும்
அவனது குரல்
ஒலித்துக்கொண்டேயிருந்தது

அவனது மரணத்தை
அவனே அறிவிப்பதைப் போல.

3 comments:

  1. வணக்கம் .
    அழவைத்த கவிதை .
    எல்லார் சாவையும் சொல்ல
    இவன் ஒரு ஆளா இருந்தான்.
    இவன் சாவைச் சொல்ல
    ஒரு ஆளும் இல்லையே..!"
    உங்கள் மனதின் வலியை
    வார்த்தைகளில் .அருமை .

    ReplyDelete
  2. வாழ்க்கை எவ்வளவு முரண்பாடாக உள்ளது ....!

    ReplyDelete
  3. மரணம் மரணமில்லாதது.வலி மிகுந்த கவிதை.

    ReplyDelete